இரு நாடியாய் நம் இதய துடிப்பு
இணைந்தொலித்த உன்னத
தருணத்தில் ,
நானும் புது பிறப்பெடுத்தேன்.
உன் வளர்ச்சியின் பொருட்டு
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்
என் இதயத்தையும் சேர்த்தே
விரியச் செய்தது.
பெற்றெடுத்த நொடியின் புனிதம்
உன்னையே சாரும்
என்னை நீ தேர்ந்தெடுத்தற்காக.
இந்த உலகின் சுழற்சியின் எனதான
கடமையாய் மட்டுமே இல்லாமல் ,
என்னுள் நீ ஏற்படுத்தும்
சுய மேன்மையின் முதல் படியே ,
இந்த தாய்மை உணர்வு.
கேள்விகளுக்கு அப்பாற்பட்ட
தெய்வத்தின் ஒப்பீடில்லாமல்,
என் குறை நிறைகளை
ஈடுசெய்யும் ஒரு சகமனுஷியாய்
உன் கைகோர்த்து நடக்கும்
வாய்ப்பு போதும் எனக்கு
இந்த வாழ்வை இரசிக்க.
கற்றுத் தரும் பொருட்டே நானும்
உன்னுடன் இவ்வாழ்க்கையை
கற்றுக்கொள்ளகிறேன்.
உன் கண்ணசைவும்
சிறு நகையும் என்
ஆற்றலின் குறியீட்டு கருவி.
என் கன்னம் தொடும்
உன் இதழின் ஸ்பரிசமே
என் செயல்திறன் பரிசு.
என் இதயம் வழிய வழிய
நீ என்னிடம் கொடுக்கும்
உன் ஒட்டுமொத்த அன்பே
நான் இந்த உலகில்
பரப்பும் பேரானந்தம்…