வாழ்வின் அர்த்தங்கள் எனை சேருமா…

உனை கடக்கும் தூரங்கள்

மெலிகின்றது

எனை மீட்கும் தருணங்களாகின்றது

தொலைத்த காதல் கனக்கின்றது

ஒரு உறவின் அவசியம்

புரிகின்றது

என் வானத்தின் விண்மீன்கள்

வெகுதூரமாய்…

இந்த பௌர்ணமி நிலவும்

மிளிர்கின்றது…

கலைகின்ற மேகங்கள் உயிர்

மீட்குமா…

ஒரு இதமான குளிர் காற்று

இதமூட்டுமா…

என் சுயம் மென்மேலும் உயர்

தேடுமா…

இந்த வாழ்வின் அர்த்தங்கள்

எனை சேருமா…

அர்த்தங்கள் மாறுமா?

மரித்து உயிர்பித்த வார்த்தைகள்

ஒரு புது தொடராய்…

அர்த்தங்கள் மாறுமா?

தடயங்கள் எங்கே?

மணல் மூடிய ஆறாய்

தடம் தேடும் வாழ்வில்

தடுமாறும் நெஞ்சின்

தடயங்கள் எங்கே?

மணம் சிதைந்த பின்பும்

மலர் வருடும் காற்றாய்

சுவாசத்தின் சுவடில்

ஒழிந்திருக்குமா மனிதத்தின் நேசம்?

ஒரு சொல் தாங்கி வருகின்ற

மொழியின் திறன் சிதைக்குமா

யுகங்களின் மௌனத்தை?

உலகனைத்தும் சிந்தும்

சிறுசிறு புன்னகை

ஆழியின் எழுச்சியாய்

மீட்குமா அடிமனதின்

புதையுண்ட கரிசனத்தை?

இந்த வாழ்க்கை…

சிதைந்த கனவின்

சிதறும் துளியாய்

சிதையுண்டு கனக்கிறது

சிதறடித்த ஓர் ஆசை….

துளைக்கின்ற எண்ணக்கீற்றின்

துலக்கும் அர்த்தமாய்

துளைத்து மீள்கிறது

துலங்காத ஒரு பொறி…

அலைப்பறிக்கும் மனதின்

அழைக்கும் குரலாய்

அலைக்கழிக்கின்ற சிந்தனைகள்

அளைவாய் அரிக்கும் இதயத்தை…

ஓய்ந்து சாயும் நொடி தேடி

ஓடிக் கொண்டிருக்கிறது

ஓய்வில்லா இந்த வாழ்க்கை…

என் செய்வேன், என் நெஞ்சே…

சுயம் தேடிய பொழுதுகளில்

வார்த்தைகளின் வசவுகளால்

வாடிய பொழுதுகளில்

வாஞ்சையாய் நீட்டிய முதல்

கையில் என்னை மீட்பேனா?

முகம் தெரியா தோழிகளின்

வன்கொடுமை பதிவுகளில்

மீட்டெடுத்த சுதந்திரத்தின்

படுகொலைக்கு துடிப்பேனா?

சிரித்தொழுகா சிறு இதழ்களின்

இருகிய முகத்தின்

சொல்லொண்ணா வேதனையில்,

மரித்த மனிதத்திற்கு

ஒப்பாரி வைப்பேனா?

பெண்களை தெய்வமாக்கி

கற்கள்தான் என நினைத்து

உயிர்ப்பின் சுவாசத்தை

கழுத்தறுக்கும் சமுதாயத்தில்

பொய்யான ஓர் அங்கமாய்

ஆறுதல் தான் தேடுவேனா?

என் செய்வேன்

என் நெஞ்சே…

கனக்கும் இதயத்தை

சுமக்கும் பொழுதுகளில்

பாரம் தாங்காமல்

நானும் தான்

இறக்கி வைக்க துணிவேனா?

ஓர்  மௌனி…

உயிர் பிழையின் 

ஒலியில்லா வடிவம் நான்,

உடலினை ஊனப்படுத்தி

என்னுள் ஓலமிடும்

உண்மைகளின் சுவாசத்தை

காத்தெடுக்கும் முயற்சியின்

உந்துதலே என் வேடம்

ஆம் , நான் ஊமையல்ல

எரிமலைகளை உள்ளடக்கிய

ஓர்  மௌனி…

நிராகரிப்பு

உன் நிராகரிப்பின் சாயல்களே

என் பலங்களின் அஸ்திவாரங்கள்

ஒவ்வொரு பாராமுகமுமே

ஒவ்வொரு அடித்தளமாய்

அமைத்து கட்டிய கோட்டையின்

மத்தியில் நான் எழுப்பிய

சிம்மாசனத்தின் உச்சத்தில்

நான்,

அதை காண முடியாமல் நீ

சிந்தும் சொற்கனல்கள்

என்னை வந்து சேர்வதேயில்லை

அடிப்பாதாளமாகிய இருட்டுக் 

குகையில்

இருக்கும் உனக்கு என்

வெற்றிகளின் அழுத்தங்கள்

 இம்சிப்பது ஒன்றும்

ஆச்சரியமில்லை……

விதை

ஒவ்வொரு இனம் சார்ந்த

படு கொலையும் அதன்

இனம் மூலமே செய்யப்படுகிறது

கோடரிக் காம்பென ,

விழும் ஒவ்வொரு விருட்சமும்

ஆயிரம் ஆயிரம் விதைகளை

உள்ளடக்கிய படியே வீழ்கிறது

விழும் பொழுதேனும்

விதைத்து  விடலாமென….

நம்பிக்கை

விடியலின் சாயல்களை
உன் கண்களில் கண்டு
துவண்ட இதயத்தை
துவைத்து புதிதாய் உடுத்த
துவங்கினேன் உண் நேர்
பார்வை போதும் எனை
தொடர்ந்து வழிநடத்த
என்ற நம்பிக்கையின் அடித்தளத்தை
இன்னும் அழுத்தமாக பற்றிக்கொண்டு.