எது நீ… எது நான்…

நீரூறும் மண்ணாய்

என் மனம் நீர்த்த

கண்ணீர்,

கானலாய் கரையுமா

இல்லை உன் மனம்

வருடி சேருமா?

நீர் சுமந்த வானமாய்

கனக்கின்ற என் இன்பம்

வனம் மேல் பொழியுமா?

இல்லை கடல் நீர்த்து போகுமா?

ஒரு கனம் மனம் சுடும் அனலாய்?

மறுகனம் மருந்திடும் பனியாய்?

எது நீ…

உயிர் உணர்த்தும் காற்றா?

உனை உயிர்ப்பிக்கும் கதிரா?

எது நான்…

உற்று நோக்கும் உன் விழி

என்னுள் எதை கடத்தி

உன்னில் எதை விதைக்கும்?

என் தேடலின் முடிவாய் நீ …

உன் புரிதலில் தொடக்கமாய் நான் …

வாழ்வின் புதிராய் நம் அன்பு…

அன்பெல்லாம் காதலே…

காதலை கொச்சைப்படுத்தாதீர்,

அது அழகானது,

ஆக்கப்பூர்வமானது,

இதயம் மேன்மையுரச் செய்துவது,

உலகை இயங்கச் செய்வது,

மென்மையான அதிர்வலைகளைக்

கொண்டது,

அன்பெல்லாம் காதலே,

நட்பாய் , பாசமாய், பிரியமாய்,

சிநேகமாய்,

பற்பல பரிமாணங்களைக் கொண்டது,

பழகும் பொழுதும் பிரியும் பொழுதும்

சுகமானது,

சோகங்களுடனும் எண்ணங்களை

விரியச்செய்வது,

வலிகளை கடக்கும் பொழுதும்,

மனதை வலிமையாக்குவது,

அன்பின் அடித்தளத்தை

உணரச்செய்வது,

பிரியத்தின் பிடிமானங்களை

பரவச் செய்வது,

நட்பின் நாகரீகத்தை

நம்பச் செய்வது,

ஆதலால் கொச்சைப்படுத்தாதீர்

காதலால் கொன்றேன் என்று…

உனதாய் நான் பிறப்பானேன்…

இரு நாடியாய் நம் இதய துடிப்பு

இணைந்தொலித்த உன்னத

தருணத்தில் ,

நானும் புது பிறப்பெடுத்தேன்.

உன் வளர்ச்சியின் பொருட்டு

என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்

என் இதயத்தையும் சேர்த்தே

விரியச் செய்தது.

பெற்றெடுத்த நொடியின் புனிதம்

உன்னையே சாரும்

என்னை நீ தேர்ந்தெடுத்தற்காக.

இந்த உலகின் சுழற்சியின் எனதான

கடமையாய் மட்டுமே இல்லாமல் ,

என்னுள் நீ ஏற்படுத்தும்

சுய மேன்மையின் முதல் படியே ,

இந்த தாய்மை உணர்வு.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட

தெய்வத்தின் ஒப்பீடில்லாமல்,

என் குறை நிறைகளை

ஈடுசெய்யும் ஒரு சகமனுஷியாய்

உன் கைகோர்த்து நடக்கும்

வாய்ப்பு போதும் எனக்கு

இந்த வாழ்வை இரசிக்க.

கற்றுத் தரும் பொருட்டே நானும்

உன்னுடன் இவ்வாழ்க்கையை

கற்றுக்கொள்ளகிறேன்.

உன் கண்ணசைவும்

சிறு நகையும் என்

ஆற்றலின் குறியீட்டு கருவி.

என் கன்னம் தொடும்

உன் இதழின் ஸ்பரிசமே

என் செயல்திறன் பரிசு.

என் இதயம் வழிய வழிய

நீ என்னிடம் கொடுக்கும்

உன் ஒட்டுமொத்த அன்பே

நான் இந்த உலகில்

பரப்பும் பேரானந்தம்…

தோழி

தோழமைக்கு பாலினம் அவசியமில்லை
என்று புரியவைத்தாய்
ஒரு பெண்ணின் பல சங்கடங்களை
அறியாமலே வளர்ந்த என்னை  உன்
இயல்பான பேச்சால் அறிய  வைத்தாய்
பெண்மனதிற்கும் ஆண்மனதிற்குமான
இடைவெளியை உன் நேர் பார்வை
மூலம் சுருங்க வைத்தாய்
வரும் காலத்தில் என்
மகளை பார்கும் பொழுது
ஆச்சரியம் கொள்ளாதே உன்
எண்ணச் சாயல்கள் அவளிடம்
தென்படுகிறது என்று,
பெண்ணியத்தை முதல்முதலில்
எனக்கு கற்றுக் கொடுத்தவள்
நீ தான்,
ஆதலால் உன் பாதிப்பின் பிரதிபலிப்பு
அவளிடம் இருப்பது இயல்புதானே?

நினைக்கும் நொடிகளில்……..

என்னுள் எத்தனை ஆசைகள்
புரியுமா உனக்கு
நான் சொன்ன நேரத்தில்
என்னுள் எத்தனை காயங்கள்
அறிவாயா நீ
நான் உதிற்கும் புன்னகையில்
என்னுள் எத்தனை சிந்தனைகள்
தெரியுமா உனக்கு
என்னுடைய மௌனத்தில்
என்னுள் எத்தனை ஏக்கங்கள்
புலப்படுமா உனக்கு
என்னுடைய கண்களில்
என்னுள் எத்தனை வார்த்தைகள்
கேட்குமா உனக்கு
நான் சொன்ன பதில்களில்
என்னுள் எத்தனை முரண்கள்
உணர்வாயா நீ
என்றோ என்னை
நினைக்கும் நொடிகளில்……..

பிரிவின் வலி

என் பால்யத்தின் பதிவுகளை
சுமந்து நிற்கும் சுவர் சொல்லும்
என் ஒவியத் திறமைகளை
பரனில் கிடக்கும் உடைந்த
மேஜையின் கிறுக்கல்கள் சொல்லும்
என் ஆழ்மனதின் இரகசியங்களை
காய்த்து தொங்கும் மாமரம் சொல்லும்
என் ஸ்பரிசத்தின் மென்மையை
காய்ந்துகிடகும் முற்றம் சொல்லும்
என் கைவண்ண ஜாலங்களை
ஆனால் எல்லாவற்றையும் விட
நான் வந்துச் செல்லும்
ஒவ்வொரு முறையும்
பிரிவின் வலி சொல்கிறது
என் தாயின் கண்கள்.

.உலகின் சமபங்கு

அங்கம் போத்தி
அறிவை முடக்கி
சுயத்தை அமுக்கி
நாவை அடக்கி
கனவை குலைத்து
எண்ணம் மறைத்து
ஊக்கம் தவிர்த்து
நாணல் வளர்த்து
அச்சம் உணர்ந்து
இருட்டில் கிடந்து
மெல்ல எழுந்து
உவகை பூண்டு
உலகை வசப்பட
உலா வரத்தொடங்கினோம்
யுகங்களின் மௌனத்தை
உடைத்தெரிந்து
போராட்டத்தின வல்லமையை
வசப்படுத்தி
ஒடுக்கலின் வலியை
தகத்தெரிந்து

பொறுமையின் வலிமையை
வீரியமாக்கி
உளம் முழுதும் வேட்கையுடன்
உலகின் சமபங்கனை
நிலை நாட்ட சீற்றம்
கொண்டு வந்துள்ளோம்.