அன்பா…காதலா…

பரிச்சியம் வேண்டினேன்

பரிகாசம் செய்தாய்…

விலகி நின்றேன்

விரும்பி வந்தாய்…

நட்பா என்றேன்

நாணிச் சிரித்தாய்…

விழியின் விரிப்பில்

வாஞ்சைகள் சிதறினாய்…

வயதின் கனவில்

வண்ணங்கள் தீட்டினாய்…

அன்பா… காதலா…

மயக்கம்கள் தந்தாய்…

பிரிந்த போதிலும்

பரிவே வேண்டினாய்…

மீண்டும் …

பார்த்த நோடியில்

காலத்தை கடத்தினாய்…

விடை பெறும் தருணத்தில்

ஒரு சிறு தயக்கமும் தந்தாய்…

உன் சாயல் மறைவிற்குள்…

மழை நின்ற ஓர் நாளில்

சிலிர்த்து உறங்கிய மனதில்

நனைந்தபடி ஓர்கனவு…

துளிகளுக்குள் ஒளிந்தபடி

உன் சாயல் மறைவிற்குள்…

நீ யோ அது…

நானேதானோ…

உன் பரிமானம் ஏற்றபடி…

நினைவில் தொலைத்த நகலை

பற்றியபடி…

முன் ஒரு அடி எடுத்தால் எனையே

விழுங்கி…

பின் ஒரு அடி எடுத்தால் உனையே

ஒளித்து…

சதுராடும் இருளில் நமையே

தொலைத்து…

தோய்த்து எடுத்த வானத்தில்

வானவில் வரைந்து…

தேடுகிறேன் உன்னை …

எந்த வண்ணத்தில் உனை

மறைத்து வைத்தேன் என்று

மறந்ததனால்…

எது நீ… எது நான்…

நீரூறும் மண்ணாய்

என் மனம் நீர்த்த

கண்ணீர்,

கானலாய் கரையுமா

இல்லை உன் மனம்

வருடி சேருமா?

நீர் சுமந்த வானமாய்

கனக்கின்ற என் இன்பம்

வனம் மேல் பொழியுமா?

இல்லை கடல் நீர்த்து போகுமா?

ஒரு கனம் மனம் சுடும் அனலாய்?

மறுகனம் மருந்திடும் பனியாய்?

எது நீ…

உயிர் உணர்த்தும் காற்றா?

உனை உயிர்ப்பிக்கும் கதிரா?

எது நான்…

உற்று நோக்கும் உன் விழி

என்னுள் எதை கடத்தி

உன்னில் எதை விதைக்கும்?

என் தேடலின் முடிவாய் நீ …

உன் புரிதலில் தொடக்கமாய் நான் …

வாழ்வின் புதிராய் நம் அன்பு…

அன்பெல்லாம் காதலே…

காதலை கொச்சைப்படுத்தாதீர்,

அது அழகானது,

ஆக்கப்பூர்வமானது,

இதயம் மேன்மையுரச் செய்துவது,

உலகை இயங்கச் செய்வது,

மென்மையான அதிர்வலைகளைக்

கொண்டது,

அன்பெல்லாம் காதலே,

நட்பாய் , பாசமாய், பிரியமாய்,

சிநேகமாய்,

பற்பல பரிமாணங்களைக் கொண்டது,

பழகும் பொழுதும் பிரியும் பொழுதும்

சுகமானது,

சோகங்களுடனும் எண்ணங்களை

விரியச்செய்வது,

வலிகளை கடக்கும் பொழுதும்,

மனதை வலிமையாக்குவது,

அன்பின் அடித்தளத்தை

உணரச்செய்வது,

பிரியத்தின் பிடிமானங்களை

பரவச் செய்வது,

நட்பின் நாகரீகத்தை

நம்பச் செய்வது,

ஆதலால் கொச்சைப்படுத்தாதீர்

காதலால் கொன்றேன் என்று…

தோழி

தோழமைக்கு பாலினம் அவசியமில்லை
என்று புரியவைத்தாய்
ஒரு பெண்ணின் பல சங்கடங்களை
அறியாமலே வளர்ந்த என்னை  உன்
இயல்பான பேச்சால் அறிய  வைத்தாய்
பெண்மனதிற்கும் ஆண்மனதிற்குமான
இடைவெளியை உன் நேர் பார்வை
மூலம் சுருங்க வைத்தாய்
வரும் காலத்தில் என்
மகளை பார்கும் பொழுது
ஆச்சரியம் கொள்ளாதே உன்
எண்ணச் சாயல்கள் அவளிடம்
தென்படுகிறது என்று,
பெண்ணியத்தை முதல்முதலில்
எனக்கு கற்றுக் கொடுத்தவள்
நீ தான்,
ஆதலால் உன் பாதிப்பின் பிரதிபலிப்பு
அவளிடம் இருப்பது இயல்புதானே?

அன்பு /Love

உனதான பொழுதுகளை
எனதாக்க முயற்சிக்கும்
தருணம் உணர்ந்தேன்
உன் அன்பின் ஆழத்தை.

 


The English version

The effort of spending

your me time with me

evinced the profundity

of the love you had  for me.


 

புத்தகம்

துயிலாத இரவுகளில்
என் கண்ணோடு கதைப் பேசியவள்
தொலைதூர பயணங்களில்
என் வழிதுணைக்கு உடன் வந்தவள்
கழிவிரக்கத்தில் மனம் துவள்கையில்
என் நம்பிக்கையை எழச்செய்தவள்
கவலைகள் எனை சூழ்கையில்
என் கலக்கத்தை களையெடுத்தவள்
மானிடத்தின் பல பரிமானங்களை
எனக்கு பரிச்சியமாக்கியவள்
என் சிந்தனைகளையும் அது ஒத்த
என் செயல்களையும் விரிவாக்கியவள்
முதிர்ச்சியை வயதோடு நிறுத்தாமல்
என் வாழ்வோடு கொண்டு சேர்த்தவள்
பல நேரம் சிந்தனைகளையும் சில நேரம்
சோகங்களையும் சல்லிசாக தந்தவள்
இலகுவாய் உலகை
இலவசமாய் சுற்றி காட்டியவள்
என் சுயம் அறிய
எனை ஊக்குவிப்பவள்
ஒவ்வொரு நாளும் எனக்கு புதுப்பது
அனுபவங்களை அள்ளிக் கொடுப்பவள்
பல முகங்களுடனும்
பற்பல பெயர்களுடனும்
என்றும் என் கைபிடிக்குள்
என் இனிய இலங்கிழாய்
புத்தகம்