சிறு விரலின் சிறையில் …

ஒரு தவம் தந்த கொடையாய்

இதழ் விரித்து நின்றாய்

உன் புன்னகை என் மனம் சேரவே

வரம் தந்த கையால்

வலி தீர்த்து நின்றாய்

உன் மொழி என் செவி சேரவே

விரிகின்ற சிறகாய் என் மனம்

பறக்கின்ற தூரமெல்லாம் உன் முகம்…

தேனாய் பாயும் என் தமிழ்

கொஞ்சும் அகரமாய் உன் மொழி…

எதில் மயங்கி நிற்பேன்…

கன்னகுழி சிரிப்பா…

கவி தோற்கும் மழலையா…

பூ பனியாய் உன் கை…

என் முகம் வருடும் நொடி

கண் பனித்து

இதழ் மலர்ந்து

உன் சிறு விரலின் சிறையில் நான்…

தாயும் மொழியும்

இதயத்தின் முதல் அன்பாய்

முகுளத்தின் முதல் அறிவாய்

தாயும் மொழியும்,

நாவின் தீஞ்சுவையாய் பதிந்த

முதல் உணவும் ஒலியும்

தாயும் மொழியும்,

பிரியும் பொழுதில் உணர்ந்திடும் வலியாய்

கதைகும் நொடியில் மகிழ்ந்திடும் வரமாய்

தாயும் மொழியும்,

தாய் தந்த தமிழாய்

தமிழ் ஈன்ற தாயாய்

மனம் தளும்பும் உணர்வாய்

என் சுயம் பேனும் அறனாய்

தாயும் மொழியும்…

உன் வசம்…

ஒரு மொழி கூறும் உணர்வு

இந்த நிசப்தம்…

என் காதின் இறுக்கம்

கலைக்கும் ஒரு ராகம்

வெகு தூரமாய்…

மனம் கொண்டு இனைக்கும்

ஒரு மந்திர கோள்

உன் வசம்…

நீ என் பெருமை

கடந்த வரமாய்

என்னிடம் இரவல் வாங்கிய

சில பல சாயல்கள் கடந்த

உன் சுயமாய் வெளிபடும்

அந்த உன்னத தருணமே

என் காத்திருப்பின் உச்சம்…

மீண்டும் ஒருமுறை…

உணர்வாய் பொழியும்

உன் மொழியில் என் இதயம்

மறுமுறை கனத்திடச் செய்வாயா?

உளமாய் எண்ணும்

உன் வாசம் என் உள்ளம்

மறுமுறை கலந்திடச் சேர்வாயோ?

காலம் கொன்ற கனத்த கணங்களால்

என் இமைகள் கரைக்காத

உவர்ப்பு துளிகளின்

மீதம் நின்று கசிந்து சிந்தும்

குருதியின் வாசத்தை

என் இதயம் துடைக்க

உன் ஒரு பார்வை போதும்

விரல் சுட்ட நீர் குமிழியாய் வெடிப்பட்ட

என் கலங்கிய மனதை ஆற்ற

ஒரு சிறு புன்னகை போதும்

யுகங்கள் கடந்த பெருத்த மௌனத்தை

என்றோ எங்கோ பழகிய ஒலியாய்

செவிசேர ஒரு வார்த்தை போதும்

இந்த மீளும் நிஜத்தின் மிச்ச காலத்தை

உணர்திட துடிக்கும்

உன் ஒரு உவப்பு போதும்

அவசியமான அர்த்தம் தேடி

அலையும் இந்த வாழ்வின் எண்ணச்

சூழச்சியில் சிக்கி ஆர்பரிக்கும்

என் இதயத்திற்கு இதமாய்

ஒரு நொடி போதும்

என் தலைமீது உன் சுவாசம்…

உனதாய் நான் பிறப்பானேன்…

இரு நாடியாய் நம் இதய துடிப்பு

இணைந்தொலித்த உன்னத

தருணத்தில் ,

நானும் புது பிறப்பெடுத்தேன்.

உன் வளர்ச்சியின் பொருட்டு

என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்

என் இதயத்தையும் சேர்த்தே

விரியச் செய்தது.

பெற்றெடுத்த நொடியின் புனிதம்

உன்னையே சாரும்

என்னை நீ தேர்ந்தெடுத்தற்காக.

இந்த உலகின் சுழற்சியின் எனதான

கடமையாய் மட்டுமே இல்லாமல் ,

என்னுள் நீ ஏற்படுத்தும்

சுய மேன்மையின் முதல் படியே ,

இந்த தாய்மை உணர்வு.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட

தெய்வத்தின் ஒப்பீடில்லாமல்,

என் குறை நிறைகளை

ஈடுசெய்யும் ஒரு சகமனுஷியாய்

உன் கைகோர்த்து நடக்கும்

வாய்ப்பு போதும் எனக்கு

இந்த வாழ்வை இரசிக்க.

கற்றுத் தரும் பொருட்டே நானும்

உன்னுடன் இவ்வாழ்க்கையை

கற்றுக்கொள்ளகிறேன்.

உன் கண்ணசைவும்

சிறு நகையும் என்

ஆற்றலின் குறியீட்டு கருவி.

என் கன்னம் தொடும்

உன் இதழின் ஸ்பரிசமே

என் செயல்திறன் பரிசு.

என் இதயம் வழிய வழிய

நீ என்னிடம் கொடுக்கும்

உன் ஒட்டுமொத்த அன்பே

நான் இந்த உலகில்

பரப்பும் பேரானந்தம்…

அம்மாவின் முகம்

காலம் கரைத்த ஓவியமாய்
என் அம்மாவின் முகம்
படிந்த தூசிகளை கண்ணீர்
கொண்டே துடைக்க முற்படுகிறேன்
சிந்தும் ஒவ்வொரு துளியும்
படிந்துவிடிகிறது நீங்கா புள்ளிகளாய்……

அம்மா

உலகெங்கும் பூக்கும்
பூக்களின் வாசமவள்
மடி துயில்கையில்
பனிமேகமாய் சுகமானவள்
கைவிரல் பற்றி நடக்கையில்
யானைபலம் வரச் செய்பவள்
அழுகையில் மார்சாய்கையில்
இலகுவாய் துயர் துடைப்பவள்
ஒப்பனையுடன் முன் நிற்கையில்
உலகயழகியென எண்ணச் செய்பவள்
எழும் பொழுது முதல் முகமாய்
என் நாட்களை பிரகாசமாகுயவள்……

தாயும் சேயும்

உன் பிஞ்சு ஐவிரலின் ஸ்பரிசம்
என் இதயத்தின் ஆழத்தில் இருந்த
வலிகளை கூட துடைத்தெறிந்தது
உன் கன்னக்குழி சிரிப்பு
என் வாழ்வின் மொத்த
சந்தோஷத்தையும் மீட்டெடுத்து தந்தது
நீ எடுத்து வைத்த முதல் அடியில்
உன் பாதம் தரை தொடும் முன்
என் இதயம் ஒரு நொடி
தாமதித்த பின்பே மீண்டும் துடித்தது
ஒவ்வொரு முறையும் நீ விழும்
முன் எனக்கு வலித்தது
உன்னுடைய ஒவ்வொரு அசைவையும்
என் கண்ணகள் பதிவு செய்யும்
நுட்பத்தை இயல்பாய் பழகிக்கொண்டது
என் வாழ்வின் ஒரு தருணத்தின்
மொத்தத்தையும் உனதாக்கிய
பொழுதுதான் உணர்ந்தேன்
என் வாழ்வின் எல்லா
பதியல்களின் சுவடுகளைத்
தாங்கி நிற்கும் என்
தாயின் மொத்த அன்பையும்.

நினைவுகள்

மழை நின்ற போதிலும்
விழும் சிறு தூறலாய்
என் மன ஓட்டத்தில்
உன் நினைவுகள்
போகட்டும் என்ற
விருப்பத்தையும் மீறி
போய்விடுமே என்ற
தவிப்போடு.