சிறு விரலின் சிறையில் …

ஒரு தவம் தந்த கொடையாய்

இதழ் விரித்து நின்றாய்

உன் புன்னகை என் மனம் சேரவே

வரம் தந்த கையால்

வலி தீர்த்து நின்றாய்

உன் மொழி என் செவி சேரவே

விரிகின்ற சிறகாய் என் மனம்

பறக்கின்ற தூரமெல்லாம் உன் முகம்…

தேனாய் பாயும் என் தமிழ்

கொஞ்சும் அகரமாய் உன் மொழி…

எதில் மயங்கி நிற்பேன்…

கன்னகுழி சிரிப்பா…

கவி தோற்கும் மழலையா…

பூ பனியாய் உன் கை…

என் முகம் வருடும் நொடி

கண் பனித்து

இதழ் மலர்ந்து

உன் சிறு விரலின் சிறையில் நான்…

உன் வசம்…

ஒரு மொழி கூறும் உணர்வு

இந்த நிசப்தம்…

என் காதின் இறுக்கம்

கலைக்கும் ஒரு ராகம்

வெகு தூரமாய்…

மனம் கொண்டு இனைக்கும்

ஒரு மந்திர கோள்

உன் வசம்…

நீ என் பெருமை

கடந்த வரமாய்

என்னிடம் இரவல் வாங்கிய

சில பல சாயல்கள் கடந்த

உன் சுயமாய் வெளிபடும்

அந்த உன்னத தருணமே

என் காத்திருப்பின் உச்சம்…

நீள்கிறது இந்த வாழ்க்கை…

பனி வருடிய சிறு பூவாய்,

கால் வருடிய சிறு அலையாய்,

தென்றல் வருடிய தளிர் தேகமாய்,

இதயம் வருடிய முதல் காதலாய்,

வருடிச் செல்கிறது சில நினைவுகள்,

பட்டு கைகளின் செல்ல ஸ்பரிசமாய்,

பட்டாம்பூச்சியின் வண்ண ஸ்பரிசமாய்,

மழை தூறலின் முதல் ஸ்பரிசமாய்,

பால் நிலவின் குளிர் ஸ்பரிசமாய்,

ஸ்பரிசித்து செல்கிறது சில நிஜங்கள்,

தளிர் புன்னகை

விட்டுச்செல்லும் கனவாய்,

ஒரு பார்வை

தந்து விட்டுச்செல்லும் ஏக்கமாய்,

தினம் வரும்

விடியல் வீசும் நம்பிக்கையால்

நீள்கிறது இந்த வாழ்க்கை…

உனதாய் நான் பிறப்பானேன்…

இரு நாடியாய் நம் இதய துடிப்பு

இணைந்தொலித்த உன்னத

தருணத்தில் ,

நானும் புது பிறப்பெடுத்தேன்.

உன் வளர்ச்சியின் பொருட்டு

என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்

என் இதயத்தையும் சேர்த்தே

விரியச் செய்தது.

பெற்றெடுத்த நொடியின் புனிதம்

உன்னையே சாரும்

என்னை நீ தேர்ந்தெடுத்தற்காக.

இந்த உலகின் சுழற்சியின் எனதான

கடமையாய் மட்டுமே இல்லாமல் ,

என்னுள் நீ ஏற்படுத்தும்

சுய மேன்மையின் முதல் படியே ,

இந்த தாய்மை உணர்வு.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட

தெய்வத்தின் ஒப்பீடில்லாமல்,

என் குறை நிறைகளை

ஈடுசெய்யும் ஒரு சகமனுஷியாய்

உன் கைகோர்த்து நடக்கும்

வாய்ப்பு போதும் எனக்கு

இந்த வாழ்வை இரசிக்க.

கற்றுத் தரும் பொருட்டே நானும்

உன்னுடன் இவ்வாழ்க்கையை

கற்றுக்கொள்ளகிறேன்.

உன் கண்ணசைவும்

சிறு நகையும் என்

ஆற்றலின் குறியீட்டு கருவி.

என் கன்னம் தொடும்

உன் இதழின் ஸ்பரிசமே

என் செயல்திறன் பரிசு.

என் இதயம் வழிய வழிய

நீ என்னிடம் கொடுக்கும்

உன் ஒட்டுமொத்த அன்பே

நான் இந்த உலகில்

பரப்பும் பேரானந்தம்…

எனக்கென்று ஒரு வானம்

எனக்கென்று ஒரு வானம்
எட்டும் தூரத்தில் நட்சத்திரங்கள்
நடக்கும் மரங்கள்
நினைக்கும் பொழுது மழை
இதமான ஒரு வெயில்
குடையென மேகங்கள்
ஏணியாய் வானவில்
ஆனந்தமூட்ட பனி தூறல்கள்
ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டேன்
சின்னஞ்சிறு இதயங்களின்
கனவு பட்டறைகளை.

தாயும் சேயும்

உன் பிஞ்சு ஐவிரலின் ஸ்பரிசம்
என் இதயத்தின் ஆழத்தில் இருந்த
வலிகளை கூட துடைத்தெறிந்தது
உன் கன்னக்குழி சிரிப்பு
என் வாழ்வின் மொத்த
சந்தோஷத்தையும் மீட்டெடுத்து தந்தது
நீ எடுத்து வைத்த முதல் அடியில்
உன் பாதம் தரை தொடும் முன்
என் இதயம் ஒரு நொடி
தாமதித்த பின்பே மீண்டும் துடித்தது
ஒவ்வொரு முறையும் நீ விழும்
முன் எனக்கு வலித்தது
உன்னுடைய ஒவ்வொரு அசைவையும்
என் கண்ணகள் பதிவு செய்யும்
நுட்பத்தை இயல்பாய் பழகிக்கொண்டது
என் வாழ்வின் ஒரு தருணத்தின்
மொத்தத்தையும் உனதாக்கிய
பொழுதுதான் உணர்ந்தேன்
என் வாழ்வின் எல்லா
பதியல்களின் சுவடுகளைத்
தாங்கி நிற்கும் என்
தாயின் மொத்த அன்பையும்.

பெயர் கூட அதிகப்படிதான்

யாரோ எவரோ
தெரியவில்லை
இப்போதைக்கு என் பக்கத்து
இருக்கைகாரர்
இரண்டு பேருக்குமான
தொடர்பு
ஒளித்து விளையாடிக்கொண்டிருகும்
எதிர் இருக்கை குழந்தை
இந்த தருணத்தில்
பெயர் கூட அதிகப்படிதான்
எங்கள் மூவருக்கும்.