வாழ்வு…

வார்த்தைகள் கோர்த்து வானவில்

எய்கிறேன்

பூக்களை தூவியே பாதைகள்

பயற்கிறேன்

புன்னகை வீசியே வாழ்க்கையை

புசிக்கிறேன்

வண்ணங்கள் சிந்தியே கனவுகள்

வரைகிறேன்…

நேசங்கள் செலுத்தியே வாஞ்சைகள்

குவிக்கிறேன்…

என் …

இருவிழி பாதையில்

இந்த உலகையே

ஆராதிக்கிறேன்…

விதை

ஒவ்வொரு இனம் சார்ந்த

படு கொலையும் அதன்

இனம் மூலமே செய்யப்படுகிறது

கோடரிக் காம்பென ,

விழும் ஒவ்வொரு விருட்சமும்

ஆயிரம் ஆயிரம் விதைகளை

உள்ளடக்கிய படியே வீழ்கிறது

விழும் பொழுதேனும்

விதைத்து  விடலாமென….

மரம்

நம் சந்திப்புகளின் காயங்களைச்
சுமந்தபடியே பயனிக்கும் எனை
எங்கோ எப்போதோ பார்த்தும் கடந்து
போகும் உங்களின் பதிவுகளில்
இன்றும் நான் முதன்மை பெறவில்லை
என்பதை உங்களின் வெற்று பார்வை
எனக்கு எப்பொழுதோ தெரிவித்துவிட்டது
ஆனாலும் என்னால் எங்கும்
நகர முடியாத   நிலைபாட்டினை
ஒவ்வொரு முறையுமே சபித்துக் கொண்டு இருக்கிறேன்
என்றோ ஒரு நாள் உங்களின்
முன்னேற்றத்திற்கான கோடாலி என்
மேல் படியும் என்பதை உணர்ந்தே……..

நினைவுகள்

மழை நின்ற போதிலும்
விழும் சிறு தூறலாய்
என் மன ஓட்டத்தில்
உன் நினைவுகள்
போகட்டும் என்ற
விருப்பத்தையும் மீறி
போய்விடுமே என்ற
தவிப்போடு.

கூடு

சிட்டு குருவியின் சிறு கூட்டைக்
காணவில்லை
இரண்டு குருவிகள்
சிறு அலகுவால்
தொடுத்துக் கட்டிய
வீட்டைக் காணவில்லை
வீடில்லாமல் அந்த
சிறு குருவிகள்
எங்கு முட்டையிடும்?
கவலை எட்டு வயது இரமேசுக்கு
அப்புறம் தனக்கு மட்டும் எதற்கு
வாழ ஒரு வீடு
வாரயிறுதிக்கு ஒரு வீடு
வருடாந்திர விடுமுறைக்கு ஒரு வீடு
சிட்டு குருவிகள் கூடுக்
கட்டாத இத்தனை வீடுகள்
தனக்கு மட்டும் எதற்கு?

ஒற்றை சூரியன்

வானமே முகமாய்
முழு நிலா திலகமாய்
மேகங்கள் கேசமாய்
இருக்கும் நட்சத்திரங்களை
எல்லாம் கோத்து
பூக்களாய் சூடிக்கொண்டேன்
விடிந்ததும் கலைந்தது
ஒற்றை சூரியனின் பார்வையால்.