குழந்தை

நிகழ்களில் சோர்ந்த மனதை
கைவிட்டு போன காதலின் இழப்பை
தவறவிட்ட வாய்பின் தவிப்பை
வறுமையின் போராட்டத்தின் வலியை
சமீபத்தின் துயரத்தின் சோகத்தை
ஒரு நொடியில்
தன்வசப்படுத்துகிறது குழந்தை
தான் செய்யும் செயலின்
மகத்துவம் அறியாமலே.

தாய்

பத்து மாதம் உன் வயிற்றில்
இருந்த நாட்கள் இயல்பாய்
முடிந்துவிட்டது எல்லோரையும் போல்
எனக்கும் உனக்குமான
உறவின் மேன்பாடு
அதன் பின் தான் தொடங்கியது
என்றோ எப்பொழுதோ
நான் சொன்ன முதல்
பொய்யை உன்
கண்ணை எதிர்நோக்க
முடியாமல் பொய்யாமை ஏற்றேன்
கலங்கி நின்ற ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் உன்
நுனிவிரல் பிடித்தே என்
பாதை கண்டுள்ளேன்
நான் விழும் ஒவ்வொரு
முறையும் எழுந்தது உன்
நம்பிக்கையின் மேல் நான்
வைத்த நம்பிகையால்தான்
ஆனால் ஏதோ ஒரு
சமயத்தில் எனக்கும்
அறியாமல் என்
வாழ்வை என்னிடமே
விட்டு நீ ஒதுங்கிய
சமயம் தான் இந்த
உறவின் பரிபூரணத்தை நீ
உனதாக்கிக்கொண்டாய்.

உண்மையை எறிக்கவா புதைக்கவா?

உண்மைகளின் கொலைகள்
பல நேரம் சத்தமில்லாமல்
நிகழ்ந்து விடுகிறது
மனிதனின் மரனத்திற்கே
நொடிகள் துக்கமே
மிஞ்சும் காலகட்டத்தில்
உண்மைகளின் துக்கத்திற்கு
அதிகம் பேர் வருவதில்லை
வருவோரும் அவசர கதியில் ஓடிவிட
நேர்மை, நியாயம், தர்மம் போன்ற
முக்கிய சொந்தங்களே
மிஞ்சி இருக்கின்றன
உண்மையை எறிக்கவா
புதைக்கவா என்று குழம்பியபடி……

யுவதி

காதலிப்பதாய் என்னை கலவரப்படுத்தி
விடாமல் என்னை தொடர்ந்துக் கொண்டிருக்கும்
உனக்குத் தெரியுமா
என்னுடைய எண்ணங்களின் எல்லைகளை
என்னுடைய இலக்கிய வாசிப்புகளை
என்னுடைய அறிவின் பதிப்புகளை
என்னுடைய ஆற்றலின் வெளிபாடுகளை
என்னுடைய இலட்சிய கனவுகளை
என்னுடைய மகிழ்சியின் உச்சங்களை
என்னுடைய சோகங்களின் சுமைகளை
என் முகம் தந்த ஈர்ப்பில்
தொடரும் உனக்கு இதுயாவும்
தெரிந்திருக்க வாய்பில்லை
என்னுடைய விருப்பு வெறுப்புகளை
எல்லோரையும் போல் நீயும்
உனதாக்க முயற்சிக்கிறாய்
தீர்கமான முடிவுகளை
தீவிரமாக தொடரும்
என் செயல்பாடுகளில்
இப்படிபட்ட செயல்கள்
என்றும் நல்லிடத்தை
பிடிக்க வாய்பில்லை.

உறவின் பரிமாணங்கள்

உறவின் நிலைப்பாடு
உதிற்கும் சூரியன் போலில்லை
நிரந்திரம் இல்லாதது
எங்கு தொடங்கும்
எதில் முடியும்
விளங்காதது
ஆழமும் அன்பும்
அடுத்தவர் உணராதது
சில உறவுகளில்
சம்பந்தபட்டவர்களுக்கும்
புரியாதது
நூலிழையாக தொடர்ந்து
அறுபட்ட தருணம்
அறியாதது
காலப்போக்கில் சந்திக்கும் பொழுது
ஆரதழுவி அழுது தீர்ப்பதும்
சிநேகமாய் சிரிப்பதும்
சம்பிரதாயமாய் கைகுலுக்குவதும்
நாகரியம் கருதி கையசைப்பதும்
பிரிவின் வலி வடுவாய் மாறி
வெற்று பார்வையை செலுத்தி
வெற்றியடைவதும்
புதிரானது
உறவின் பரிமாணங்கள்.

பிரிவின் வலி

என் பால்யத்தின் பதிவுகளை
சுமந்து நிற்கும் சுவர் சொல்லும்
என் ஒவியத் திறமைகளை
பரனில் கிடக்கும் உடைந்த
மேஜையின் கிறுக்கல்கள் சொல்லும்
என் ஆழ்மனதின் இரகசியங்களை
காய்த்து தொங்கும் மாமரம் சொல்லும்
என் ஸ்பரிசத்தின் மென்மையை
காய்ந்துகிடகும் முற்றம் சொல்லும்
என் கைவண்ண ஜாலங்களை
ஆனால் எல்லாவற்றையும் விட
நான் வந்துச் செல்லும்
ஒவ்வொரு முறையும்
பிரிவின் வலி சொல்கிறது
என் தாயின் கண்கள்.

மரம்

நம் சந்திப்புகளின் காயங்களைச்
சுமந்தபடியே பயனிக்கும் எனை
எங்கோ எப்போதோ பார்த்தும் கடந்து
போகும் உங்களின் பதிவுகளில்
இன்றும் நான் முதன்மை பெறவில்லை
என்பதை உங்களின் வெற்று பார்வை
எனக்கு எப்பொழுதோ தெரிவித்துவிட்டது
ஆனாலும் என்னால் எங்கும்
நகர முடியாத   நிலைபாட்டினை
ஒவ்வொரு முறையுமே சபித்துக் கொண்டு இருக்கிறேன்
என்றோ ஒரு நாள் உங்களின்
முன்னேற்றத்திற்கான கோடாலி என்
மேல் படியும் என்பதை உணர்ந்தே……..

புத்தகம்

துயிலாத இரவுகளில்
என் கண்ணோடு கதைப் பேசியவள்
தொலைதூர பயணங்களில்
என் வழிதுணைக்கு உடன் வந்தவள்
கழிவிரக்கத்தில் மனம் துவள்கையில்
என் நம்பிக்கையை எழச்செய்தவள்
கவலைகள் எனை சூழ்கையில்
என் கலக்கத்தை களையெடுத்தவள்
மானிடத்தின் பல பரிமானங்களை
எனக்கு பரிச்சியமாக்கியவள்
என் சிந்தனைகளையும் அது ஒத்த
என் செயல்களையும் விரிவாக்கியவள்
முதிர்ச்சியை வயதோடு நிறுத்தாமல்
என் வாழ்வோடு கொண்டு சேர்த்தவள்
பல நேரம் சிந்தனைகளையும் சில நேரம்
சோகங்களையும் சல்லிசாக தந்தவள்
இலகுவாய் உலகை
இலவசமாய் சுற்றி காட்டியவள்
என் சுயம் அறிய
எனை ஊக்குவிப்பவள்
ஒவ்வொரு நாளும் எனக்கு புதுப்பது
அனுபவங்களை அள்ளிக் கொடுப்பவள்
பல முகங்களுடனும்
பற்பல பெயர்களுடனும்
என்றும் என் கைபிடிக்குள்
என் இனிய இலங்கிழாய்
புத்தகம்