சிரிப்பு

சிரிப்பு ஒரு இனிய தொத்தி
யாரிடமும் அதைப் பார்த்துவிடாதீர்
உமக்கும் தொத்திக் கொள்ளும்
ஒரு குழந்தையிடமிருந்து
ஒரு மூதாட்டிக்கு
அவரிடம் இருந்து
ஒரு வழிப்போக்கனுக்கும்
வழிப்போக்கனை திட்ட
நினைத்த ஓட்டுனருக்கும்
ஓட்டுனரின் தயவால்
எல்லா பயணிகளுக்கும்
அதில் ஒரு பயணியாய்
இருந்த என் தோழி மூலம்
எனக்கும் நொடியில்
பரவி விடுகிறது சிரிப்பு

காலடி பூமி

நிம்மதியாய் கழித்த வாழ்வில்
பொறியாய் தொடங்கி
நெருப்பாய் பரவிய
போரின் பசிக்கு
என் முழுவதையும் இழந்து
முகம் இருந்தும்
முகவரியற்ற அகதியாய்
உலகுக்கு வைக்கும் கோரிக்கை
நொடிப்பொழுதில் காலம்
என்னிடம் இருந்து
உருவிய என்
காலடி பூமியை
முடிந்தால் மீட்டுத்தாருங்கள்
வாழமுடியவில்லை என்றாலும்
சாவதற்காவது.

நினைவுகள்

மழை நின்ற போதிலும்
விழும் சிறு தூறலாய்
என் மன ஓட்டத்தில்
உன் நினைவுகள்
போகட்டும் என்ற
விருப்பத்தையும் மீறி
போய்விடுமே என்ற
தவிப்போடு.

குதூகலம்

காலச் சுழற்சியில்
பலவற்றைப் பார்த்து
பழகிய போதும்
எங்கோ இன்னும்
நம் இதயத்தின்
ஆழத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு ஐந்து வயது
சிறு பிள்ளையின் குதூகலம்
ஆனால் அரிதாக
மிகவும் அரிதாகவே
வெளிப்பட.

ஒரு சொல்

சொல்லாத சொல்லினால்
கூடாமல் போன காதல்
சொன்ன சொல்லினால்
தொலைத்த அன்பு
பேசாத மௌனத்தால்
உதவத் தவறிய தருணம்
அச்சுறுத்திய கோழைத்தனத்தால்
ஊமையான உண்மை
இவையாவும் சொல்லிவிடும்
ஒரு சொல்லின் மதிப்பு.

கடவுள்

இருண்ட பாதையில் தூரத்து
ஒற்றை விளக்காய்
பாலைவன வெயிலில்
ஒரு குவளை தண்ணீராய்
சுழற்சியின் நடுவில்
எங்கிருந்தோ வரும் துடுப்பாய்
விரக்தியின் உச்சத்தில்
எதிர்பாரா உந்துசத்தியாய்
வருத்ததின் மிகுதியில்
இதமான ஒரு புன்னகையாய்
சுயகழிவிரக்கத்தின் தத்தளிப்பில்
தோள் தட்டிய நம்பிக்கையாய்
நானே அறியாமல்
என்னோடுப் பயனிக்கும்
தோழனாய் கடவுள்.

புள்ளியாய் பூமி

நெடு தூர வானம்
மின்னும் விண்மீன்கள்
தொடத்தூண்டும் அவா
கிளர்ச்சிப் பொங்கப்
பறந்துச் சென்று
எட்டிப் பிடித்து
திரும்பிப் பார்த்தால்
புள்ளியாய் பூமி.

கூடு

சிட்டு குருவியின் சிறு கூட்டைக்
காணவில்லை
இரண்டு குருவிகள்
சிறு அலகுவால்
தொடுத்துக் கட்டிய
வீட்டைக் காணவில்லை
வீடில்லாமல் அந்த
சிறு குருவிகள்
எங்கு முட்டையிடும்?
கவலை எட்டு வயது இரமேசுக்கு
அப்புறம் தனக்கு மட்டும் எதற்கு
வாழ ஒரு வீடு
வாரயிறுதிக்கு ஒரு வீடு
வருடாந்திர விடுமுறைக்கு ஒரு வீடு
சிட்டு குருவிகள் கூடுக்
கட்டாத இத்தனை வீடுகள்
தனக்கு மட்டும் எதற்கு?

வேடிக்கைப் பார்ப்போர்

எனை மீறி செயல்படுகிறது
இந்த மனம்
அறிவின் கட்டுப்பாட்டுக்குள்
சிக்காமல்
சுயமாய் அதன் போக்கில்
எங்கே எந்த இடரான
செயல் நடந்தாலும்
அதன் போக்கில் அங்கு
போய் நின்று கொள்கிறது
அறிவுடன் எதையாவது
செய் என்ற போராட்டத்துடன்
எத்தனை முறை அதற்கு
எடுத்துச் சொல்வது
எல்லா அநியாயங்களுக்கும்
நாம் போராட முடியாது
அதற்காக பிரத்யோகமாய்
சிலர் இருப்பர்
கையாளாகாதனத்தினால் தத்தளிக்கும்
காலத்தின் குறியீடுகள் நாம்
வேடிக்கைப் பார்பது மட்டுமே
நமது வேலை என்று.